கனி என்பார்கள். பூ என்பார்கள். தேன் என்பார்கள்.
திகைப்பு என்பார்கள். வியப்பு என்பார்கள். குளிர்மை என்பார்கள். செழுமை என்பார்கள். தாய்மை. என்பார்கள். பெண்மை என்பார்கள். பூ, பழம், காய், கனி, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, துண்டு துப்பட்டா, முந்தானை...
இவை தானா அவள்? இவையும் தான். இவை தாண்டிய பலவும் தானே? ஆனால்- அந்தப் பலவும் பற்றி வசதியாக மறந்து போனது சமூகம். அந்த ஞாபகப் பொட்டலங்களைப் பிரித்து, ஒவ்வொன்றாக அடுக்கிக் காட்டுகிறாள் அவள்.
’காலம், சரித்திரம் இவற்றால்..தொடப்படாத உடல் இல்லை. பெண் உடல், குழந்தை உடல், இளம் பெண் உடல், தாயின் உடல், தாயாகாத உடல், வயோதிக உடல், நோய் வாய்ப்பட்ட உடல், ஆரோக்கியமான உடல், உடலுக்கான இன்பங்களைத் துவைத்த உடல், இன்பங்களைத் தவிர்த்த உடல், பாலியல் வன் முறைக்கு உட்பட்ட உடல் என்று... பெண் உடல்கள் பல தரப் பட்டவை. எவ்வித வேறுபாடும் இன்றி, ஒற்றை உடலாய், ஒரே குணங்கள் உடையதாய், பெண் உடலைப் பார்ப்பது சரித்திரத்தைப் புறக்கணிக்கும் செயல்.’
-அம்பை இப்படிச் சொல்லுவது புரியுமா பொது புத்திக்கு?
தண்ணீர் என்றால் நீர்த்து ஓடுவது. கையில் சிக்காமல் நழுவுவது, தனித்த உருவமற்றது என்றே நினைக்கும் பொதுப் புத்திக்கு-உளங்கை மழை வேறு. ஊற்றுநீர் வேறு. மழைநீர் வேறு. வாய்க்கால் வேறு. நீரூற்று வேறு. பனி நீர் வேறு. ஆறு வேறு. குளம் வேறு. குட்டை வேறு... என்பதான வேறுபாடு பற்றிய கவலையும், கூர்த்த நினைப்பும் கிடையாது. அது போல- அவள் என்றால் இரு முலையும் ஒரு யோனியும் என்பதே பொதுப்புத்தியின் சிந்தனை உயரம்.
’முற்றிலுமாகத்/ தன் அடையாளம் இழந்து/ நொறுங்கிக் கிடக்கிறது/ முன்பு நான் இருந்த என் பூர்வீக வீடு/
செங்கல்லும் சிமெண்டும் காரையும் கூரையும் சேர்த்துக் கட்டியதா சல்மாவின் வீடு? அது சிறுமியின் வீடு. பதின்ம வயதினளின் வீடு. திருமணத்துக்கு முன் பின் வீடு... என்பதாகப் பரிமாணம் கொள்ளும் ஐந்தரை அடிச் சதைக்கோளம். இதுநாள் வரைக்கும் அவளின் பௌதீகம், அவனுக்கானதே. அவளின் தோல் மினுமினுப்பு அவனுக்கானதே. அவளின் பல்வரிசை அவனுக்கானதே.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/andal_3.jpg)
அவள் தின்னும் வெற்றிலை, உண்ணும் சோறு, பருகும் நீர், எல்லாமே அவனுக்கானதே. அவனின் திருப்தி யும், ஏப்பமும், குறட்டைத் தூக்கமும், அவளின் பௌதீகம் தருவதாகக் கற்பிதம் இருந்தது. அதைத் தகர்க்கும் உளியைக் கொண்டு வருகிறார் சுகிர்தராணி.
’வெடிமருந்து எழுத்துக்களைப்
பின்புறம் வீசுகிறேன்
வெடித்துச் சிதறுகிறது வீடு/
நிமிர ஆரம்பிக்கிறது முதுகு’
-நிமிர்ந்த முதுகெலும்புள்ள இன்றைய அவள்-
பிரபஞ்சவெளியில் கடைசிவரை வியாபிக்க வேண்டும். துருவ நட்சத்திரமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக மினுக்கும் விண்மீனாக இருத்தல் வளர்ச்சி அல்ல. எல்லோரும் இன்புற்றிருக்க நினைத் தலே முக்கியம்.
‘எனக்கு முகம் இல்லை
இதயம் இல்லை ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்
நீண்ட கூந்தல், சிறிய இடை,
பருத்த தொடை இவைகளை உள்ளன.
சமையல் செய்தல் படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல் பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகளாகும்
கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும் அவர்கள்
எப்போதும் என் உடலையே நோக்குவர்
கணவன் தொடங்கி
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்.
-சிவந்த அழகான பெண் வேண்டும் என்று கேட்கும்
திருமண விளம்பரங்கள் சொல்லும் சூட்சமம் என்ன? அவளின் அறிவு, திறமை, தகுதிப் பாடு, இரண்டு, மூன்று, நான்காம் பட்சமே. உடல்- அவனின் ஆளுகைக்கும் ஆளுமைக்கும் ஆனதாக மாறுகிறது என்ற முரசறைதல்தான் திருமண விளம்பரங்கள்.
’உன்னித்து எழுந்த என்தட முலைகள்
மானிடர்க்கு என்று பேச்சுப்படில்
வாழ்கிலேன்..’
-என்று தன்னையே மதர் மதர்த்து வியக்கிறாள் ஆண்டாள்.
தன் பௌதீகத்தைத் தானே வியந்து, நயந்து பேசுதல்- பறந்துபோன பெண் குரலில் இருந்து மாறிய குரலாக இப்போது தோன்றலாம். முன்னோடிக் குரலாக வெள்ளிவீதியார்- இடமாக, வலமாக, மேலாக, கீழாக, நடுவாக, நின்று வாள் சுழற்றும் ஆக்ரோஷம் அதிர வைக்கிறது.
’கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே’ (குறுந் தொகை)
-போட்டுத் தாக்குதல், வச்சு செய்தல் என்ற இருபத்தோராம் நூற்றாண்டு நவீன வார்த்தை யாடல்கள், சங்ககாலப் பாடலுக்குப் பொருந்துகிறது. அப்படியான பெண் குரல்கள், சமத்துவ குரல்கள், தன் உள்ளும் புறமும் ஒளிப்படம் எடுப்பதுபோல், கவிப்படம் எடுத்த குரல்கள்- உலகத்தில் வேறெங்கும் கேட்கும் முன்பே நம் மண்ணில் கேட்டிருப்பது நயத்தக்க நாகரிகம்தான்.
அவனுக்காகக் காத்திருக்கிறாள் ஆண்டாள். பாற் கடலில் பள்ளி கொள்பவனை புணரும் ஆசையினால் அவளின் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலிக்கிறது.
’குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப்
பணைத்தோளோடு
அற்ற குற்றமவை தீர அணைய
அமுக்கிக் கட்டீரே’
-என்னும் ஆண்டாளின் பரிதவிப்பை விடவும், தன்னுணர்வை தானே எழுதும் அரசியலை, உடல் அரசியலை, கண்ணியப்படுத்தி, கம்பீரபடுத்திய நேர்மை வியப்பைத் தருகிறது.
தன் மனம் நேர்ந்த கோவலனுக்காக மாதவி -பத்து
வகை மூலிகைகள், ஐந்து வகை நறுமணப் பொருட்கள், 32 வகை நீராடும் மணப் பொருட்கள், நெய் பூசிய கரிய கூந்தல், மணம் மிகுந்த சாம்பிராணிப் புகை, கஸ்தூரி, ஜவ்வாது தடவி, இந்திர நீலத்து காமத்துடன், கூடலும், ஊடலும் கொண்டிருந்தாள்.
இந்த விவரணை- உடல் கொண்டு, தன் உணர்வை உரக்கப் பேசிய தன்மையை உயர்திணை ஆக்குகிறது.
வெர்ஜினியா உல்ஃப் பெண்மையை, குரலை, பொதுமைக் குரலாக ஆக்குகிறார்...
’ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லை
ஒரு பெண்ணாக எனக்கென்று
ஒரு நாடு வேண்டாம்
ஒரு பெண்ணாக
இந்த உலகமே என் நாடு’
-அவளுக்கென்ற சொந்தமாகப் பெயர் இல்லை. முகவரி இல்லை. ஊர் இல்லை. எல்லாப் பெண்களும் திருமணம் என்ற கருத்தியலை முன்வைத்து, புலம் பெயர் கிறார்கள். புகுந்தவீடு தரும் சந்தோஷம், தொடுவானமாகத் தள்ளிக்கொண்டே போகிறது. ஆனாலும், அது குறித்த உரத்த உரையாடலைத் துவங்க, எந்தப் பெண் ணுக்கும் விருப்பமில்லை.
விருப்பப்படாதவாறு அவன் பதப்படுத்தப்படுகி றாள். பதனப்படுத்தப் படுகிறாள்.
‘பந்தயங்களில் பணயமாக்கப்பட்டேன்
கோவில்களில்
விக்கிரகங்களாக ஆக்கப்பட்டேன்
எனக்காகப் போர் தொடுத்தார்கள்
கவர்ந்தவனிடமிருந்து மீட்டார்கள்
காவியம் படைத்தார்கள்
உடையாய், உரியவளாய்,
உயிரற்ற ஜடப் பொருளாய்
ஆகி போனேன்’
-என்பதான கனிமொழி கருணாநிதியின் சத்திய வார்த்தைகளைச் சமூகம் மறுக்க முடியுமா? அவளின் சூல் மானுடத்துக்கானது. அவளின் பனிக்குடம் மானுடத்துக்கானது. அவளின் முலையும் மானுடத் துக்கானது. அதை அடிமைப் பண்டமாக மாற்றும் போது வீறு கொண்டு எழுகிறாள் அவள். மென்மை எனப்படும் உடலை ஆயுதம் ஆக்குகிறாள். சிற்றகல் எனப்படும் உடலைத் தீப்பிழம்பு ஆக்குகிறாள். ஒரு துளி நீர் என்பதை ஜீவநதி ஆக்குகிறாள்.
அவளின் பௌதிகம்- அவன் பார்வையிலிருந்து
எழுதப்பட்டது. அவன் திசையிலிருந்தே பார்க்கப்
பட்டது. அவன் வார்த்தையில் இருந்தே உணரப்பட்டது.
அத்தனை பிரயத்தனமும் வீணானதே என்பதை, அவளே அவளை எழுதும்போது உணர்த்துகிறாள். காரணம்- அவன் பார்த்தது, தொட்டது, துய்த்தது, உணர்ந்தது, புணர்ந்தது, அறிந்தது, தெரிந்தது, எல்லாமே தோலின் ஆழம் வரைதான். அவளின் மனசுக் குள் பிரவேசிக்க அவள் மட்டுமே அறிவாள். அதன் மர்மம் சாவி, கடவுளுக்கும் தெரியாது. அவளின் மாய பூமிக்குள், காற்றும் நுழையாது. அவளின் மந்திர வெப்பத்துக்குள் சூரியனும் ஊடுருவ முடியாது.
பாஷ்டோ மொழிக் கவிஞர் ஷகிலா வஜாடி, உச்சந் தலையில் ஆணியை இறக்குவது போல, வார்த்தையை இறுக அழுத்துகிறார்.
‘என் சிறகுகள் முறிந்த போதும்
நான் பறப்பேன்
வேட்டைக்காரரால்
என் கூடு சிதைந்து விட்டது.
எனினும் நான் பறப்பேன்.
முறிந்த சிறகுகளை உடைய
காயப்பட்ட பறவை நான்.
ஆனாலும்
பறப்பேன்... பறப்பேன்... பறப்பேன்..’
-அவளும் வாழ்க்கைத் தளங்களின் பல
மடங்குகளில் புழங்குகிறாள். ஆனாலும், அதிர்வலைகள் இல்லாமல், அடையாளம் இல்லாமல், காற்றின் அரூபத் தன்மையோடு, அவள் தன் இருப்பை முடித்துக்கொள்ள வேண்டும். தன் குறித்த சிலாகித்தல் ஏதுமற்றுப் போகவேண்டும் என்கிற, சனாதனம் தவிடுபொடியாகி, அவளின் தடம், காற்றை ஆற்றுப்படுத்துகிறது.
இந்தத் துணிச்சல்தான் மாலதி மைத்திரிகளின் குரலாகிறது.
’பணம் அனுப்பியது கிடைத்ததா?
ஊதாரித்தனமா செலவு செய்யாதே
கணக்கு எழுதிவை
தின்னு அழிக்காதே
வெள்ளை பூண்டு வெங்காயம்
மசாலா கறி சேத்துக்காதே
எல்லாம் உன் நன்மைக்குத்தான்
படியை விட்டு இறங்கும்போது
முந்தானையை இழுத்துப் போர்த்திக்கனும்’
-கணவனின் சாக்கடை மனசை அப்பட்டமாக வார்த்தையில் அள்ளிசெருகுகிறார்கள்.
இனிமேலும் ஆண்கள் பிராணநாதா இல்லை. ஐயன்மீர் இல்லை..
(சுடரும்...)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2020-08/andal-t.jpg)